Homeஅரசியல்50 ஆண்டு காலம் கட்சியிடம் இல்லாத சொத்தை மீட்டுள்ளேன்

50 ஆண்டு காலம் கட்சியிடம் இல்லாத சொத்தை மீட்டுள்ளேன்

50 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் கட்சியின் கட்டுப்பாட்டில் இல்லாத சொத்தை மீட்டெடுப்பதற்கு கடுமையான முயற்சியும், பொருட்செலவும் செய்து நகர காங்கிரஸ் கமிட்டி பெயரில் பதிவு செய்யப்பட்டு, பட்டாவும் பெறப்பட்டுள்ளது. தவறான புரிதலின் காரணமாக என்னை நீக்கியிருக்கின்றனர் என செங்கம் குமார் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக 9 வருடத்திற்கு மேல் பணியாற்றிய செங்கம் குமார் அப்பதவியிலிருந்து நேற்று நீக்கம் செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை பேகோபுரத் தெரு மலையேறும் பாதைக்கு அருகில் ஜனதா தள கட்டுப்பாட்டில் இருந்த சுமார் 38 ஆயிரம் சதுர அடி இடத்தை காங்கிரஸ் கட்சியினர் மீட்டெடுத்தனர்.

50 ஆண்டு காலம் கட்சியிடம் இல்லாத சொத்தை மீட்டுள்ளேன்
மீட்கப்பட்ட இடத்தின் ஒரு பகுதி

இந்த இடத்தை மீட்பதற்கு ரூ.90 லட்சம் வரை செலவு செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த பணத்தை செலவு செய்தவர்கள் அந்த இடத்தை அனுபவித்துக் கொள்ளும் வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அனுமதி பெறாமல் ஆவணங்களில் திருத்தம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுபற்றி காமராஜரின் பேத்தி கமலிகா, காங்கிரஸ் தலைமைக்கு புகார் தெரிவித்திருந்தார். இதன் பேரில் டெல்லியிலிருந்து வந்திருந்த காங்கிரஸ் சொத்து பாதுகாப்பு குழுவினர் விசாரணை நடத்தி அறிக்கையை தலைமையிடம் தாக்கல் செய்தனர்.

See also  அரசு நிகழ்ச்சிகளில் எ.வ.வே.கம்பன் சீப்-கெஸ்ட் விவகாரம்

இதையடுத்து செங்கம் குமார், மாவட்ட காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து நேற்று நீக்கம் செய்யப்பட்டார். ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதனின் மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியிருந்தும் அவர் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

50 ஆண்டு காலம் கட்சியிடம் இல்லாத சொத்தை மீட்டுள்ளேன்

இது குறித்து செங்கம் குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் என குறிப்பிட்டு அவர் வெளியிட்டிருக்கிற அறிக்கையில் கூறியிருப்பதாவது,

1960 ல் திருவண்ணாமலை நகர காங்கிரஸ் கமிட்டி பெயரில் பதிவு செய்யப்பட்ட சொத்து 1969-காங்கிரஸ் பிளவுக்கு பிறகு ஸ்தாபன காங்கிரசும், 1977-க்கு பிறகு ஜனதா கட்சியும், 1980-க்கு பிறகு ஜனதா தளம் கட்டுப்பாட்டிலும் இந்த சொத்து கைமாறிப் போனதை அனைவரும் அறிவார்கள்.

ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் கட்சியின் கட்டுப்பாட்டில் இல்லாத சொத்தை மீட்டெடுப்பதற்கு கடுமையான முயற்சியும், பொருட் செலவும் செய்து இன்றைக்கு திருவண்ணாமலை நகர காங்கிரஸ் கமிட்டி பெயரில் பதிவு செய்யப்பட்டு, பட்டாவும் பெறப்பட்டுள்ளது. இன்றைக்கு காங்கிரசின் சொத்தாக மாறியிருக்கிறது.

இந்நிலையில், இந்த சொத்து பிரச்சினையின் காரணமாக காங்கிரஸ் மேலிடத்தில் சிலரால் கூறப்பட்ட புகார்களின் அடிப்படையில் தவறான புரிதலின் காரணமாக எனது பதவி நீக்கம் நிகழ்ந்துள்ளது. இதில் நான் எந்த தவறும் செய்யவில்லை என்பதை உறுதியாக கூறுகிறேன். உண்மையின் பக்கம் நான் நிற்கிறேன். காங்கிரஸ் தலைமை மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறேன்.

See also  வார்டில் தலைகாட்ட முடியவில்லை-திமுக கவுன்சிலர் புலம்பல்

40 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் பேரியக்கத்தில் முழு நேரமாக பணியாற்றியவன் என்ற முறையில் எனது பக்க நியாயத்தை ஆதாரங்களுடன் காங்கிரஸ் தலைமையிடம் சமர்ப்பித்து உண்மையை நிலைநாட்டுவேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Tiruvannamalai Agnimurasu

contact@agnimurasu.com

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!