திருவண்ணாமலை மலை மீது கணக்கெடுக்கப்பட்டுள்ள வீடுகளை காலி செய்யுமாறு தாசில்தார் நோட்டீஸ் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையின் மீது நீர் வழிப்பாதைகளை ஆக்கிரமித்து சட்ட விரோதமாக பட்டா இல்லாமல் பலர் வீடுகள் கட்டியுள்ளனர் என்றும், அதனை அகற்ற வேண்டும் என்றும் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை ஜகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் திருவண்ணாமலை மலையே சிவன்தான், அங்கு எப்படி கழிப்பிடங்களும், செப்டிக் டேங்க்குளும் கட்ட அனுமதிக்கலாம் என ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியிருந்தது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஓய்வு பெற்ற நீதிபதி எம்.கோவிந்தராஜன் தலைமையில் ஒரு குழுவை அமைத்து ஜகோர்ட்டு உத்தரவிட்டது.
இதற்கிடையில் மலையில் ஏற்பட்ட மண் சரிவில் 7 பேர் உயிரிழந்தனர். மலை மீது எத்தனை கட்டிடங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது என்று வருவாய்த்துறையினர் கணக்கெடுப்பு நடத்தினர். மலை மீது 6 ஆயிரம் வீடுகள் உள்ளது. 1535 வீடுகள் அபாயகரமான இடத்தில் உள்ளது தெரிய வந்ததாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை சென்னை ஐகோர்ட்டில் கடந்த 6-ஆம் தேதி நடைபெற்றது. அப்போது 1535 வீடுகள் அகற்றுவது குறித்து திருவண்ணாமலை கலெக்டர் எடுத்த நடவடிக்கை என்ன? என்பது குறித்து அறிக்கை அளிக்க கோர்ட்டு உத்தரவிட்டது.
மேலும் மலை மீது ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்த கலெக்டர் பாஸ்கர பாண்டியன் மாற்றப்பட்டது ஏன்? இப்போது உள்ள கலெக்டர், கோர்ட்டு அமைத்த குழு கூட்டத்தை நடத்தாதது ஏன்? 3 மாதமாக என்ன செய்து கொண்டிருந்தார்? எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.


இதையடுத்து கடந்த 13-ஆம் தேதி திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் கோர்ட்டு அமைத்த குழுவின் கூட்டம் ஓய்வு பெற்ற நீதிபதி எம்.கோவிந்தராஜன் தலைமையில் நடந்தது. இதில் கலெக்டர் தர்ப்பகராஜ் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். முன்னதாக தாமரை குள ஆக்கிரமிப்புகளை ஓய்வு பெற்ற நீதிபதி பார்வையிட்டார்.
இந்நிலையில் மலை மீது கணக்கெடுக்கப்பட்ட வீடுகளுக்கு இன்று தபால் மூலம் நோட்டீஸ் சென்றடைந்தது. தாசில்தார் அனுப்பியுள்ள இந்த நோட்டீசில் கூறப்பட்டிருப்பதாவது,
1905-ஆம் ஆண்டு தமிழ்நாடு III ஆவது சட்டத்தின் 7வது பிரிவின் கீழ் அறிவிப்பு
திருவண்ணாமலை 1/4. 4வது புதுத் தெரு, 1வது சந்து என்ற முகவரியில் வசிக்கும் மணிமாறன் என்பவருக்கு கீழே கண்டுள்ள விவரப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள அரசினர் சொத்தாக இருக்கிற நிலத்தை அனுமதி பெறாமல் நீங்கள் அனுபோகத்தில் வைத்துக்கொண்டு இருப்பதாகத் தெரிய வருவதால் ஏன் உங்களுக்குத் தீர்வை விதிக்கக்கூடாது அல்லது நிலத்திலிருந்து அப்புறப்படுத்தி அதிலுள்ள பயிர்கள். விளைச்சல்கள், கட்டுமானங்கள் கட்டடங்கள், அதில் விட்டு வைத்திருக்கப்பட்டுள்ளவை ஆகிய இவைகள் ஏன் பறிமுதல் செய்யக்கூடாது என்பதற்கும் காரணத்தை நீங்கள் விரும்பினால் கடிதம் பெறப்பட்ட நாளிலிருந்து 15 நாட்களுக்குள் நேரிலாவது அல்லது எழுத்து வடிவிலாவது தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோட்டீஸ் அனுப்பப்பட்ட சம்பவம் குடியிருப்புவாசிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீடியோ செய்திகளை காண,



