திருவண்ணாமலையிலிருந்து தெலுங்கானா மாநிலத்திற்கு 723 கிலோ மீட்டர் தூரத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. இதை வரவேற்று ஆந்திர, தெலுங்கானா மக்கள் நோட்டீஸ்களை ஒட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
அதே சமயம் சென்னைக்கு நேரடி ரயில் என்பது கானல்நீர்தானா? என திருவண்ணாமலை மக்கள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். கிரிவலமும் செல்கின்றனர். பவுர்ணமி நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். குறிப்பாக தெலுங்கானா மற்றும் ஆந்திரா மாநிலத்தில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர்.
ஒரு காலத்தில் வெளிநாட்டவர் அதிக அளவில் வரும் நகரமாக திருவண்ணாமலை இருந்தது. அவர்களுக்காக ரமணாசிரமம், விசிறி ஆசிரமத்தை சுற்றி மட்டும் தங்கும் விடுதிகள் இருக்கும். இன்றைக்கு ஆந்திர, தெலுங்கானா மக்கள் வருகை அதிகரித்து விட, தெருவெங்கும் தங்கும் விடுதி ஏற்படுத்தப்பட்டு விட்டது.
2016 ஆம் ஆண்டில், ஆந்திர அரசின் கலாச்சார ஆலோசகராக இருந்தவர் சாகந்தி கோட்டேஸ்வர ராவ். இவரது சொற்பொழி தெலுங்கு பேசும் மக்களிடம் பிரபலம் ஆகும்.

சாரதா ஞான புத்திரர் (அறிவு தெய்வத்தின் மகன்) உள்ளிட்ட பல்வேறு பட்டங்களைப் பெற்றுள்ள இவரது சொற்பொழிவு பல்வேறு வானொலி மற்றும் தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பப்பட்டன. திருப்பதி தேவஸ்தானம் உள்ளிட்ட சில பக்தி தொலைக்காட்சி சேனல்களிலும் இடம் பெற்றது. பாடல் பெற்ற தலங்களைப் பற்றிய தொகுப்புரை நிகழ்த்துவதில் வல்லவர். அதில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலிலும் ஒன்று.
அண்ணாமலையாரை ஒரு முறை தரிசித்தால் மறுபிறவி இல்லை, பாவங்கள் தீரும், கேட்டவரம் கிடைக்கும், எமதர்மரே வந்து சென்ற தலம் என அவர் அண்ணாமலையாரின் பெருமைகளை விளக்கி பேசினார். அதன் பிறகே திருவண்ணாமலைக்கு தெலுங்கு பேசும் மக்களின் வருகை அதிகரித்ததாக கூறப்படுகிறது. தெலுங்கு மக்கள் சித்தர்கள் மீது அதிக நம்பிக்கை உடையவர்கள், திருவண்ணாமலையில் பல்வேறு சித்தர்கள் இன்றும் இருப்பதாக நம்பி வருகின்றனர். அண்ணாமலையாரை நாடி வந்தால் பிரச்சனைகள் தீரும் என்பதாலேயே அதிக அளவில் வருவதாகவும் ஒரு பேச்சு உள்ளது.
ஆந்திர, தெலுங்கானா அரசுகள் திருவண்ணாமலைக்கு கூடுதல் பஸ்களை இயங்கி வரும் நிலையில் திருவண்ணாமலையிலிருந்து தெலுங்கானா, ஆந்திராவை இணைக்கும் வகையில் தற்போது ரயிலும் விடப்பட்டுள்ளது. மற்ற ஊர்களில் இருந்து திருவண்ணாமலை வழியாக காட்பாடி, திருப்பதி, காரக்பூர், புருலியா, விழுப்புரம் போன்ற ஊர்களுக்கு ரயில் சென்று வரும் நிலையில் முதன்முறையாக திருவண்ணாமலையிலிருந்து தெலுங்கானாவிற்கு ரயில் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
சென்னைக்கு திருவண்ணாமலை மற்றும் சுற்றுப் பகுதியிலிருந்து வேலைக்காக ஏராளமான இளைஞர்களும், இளம்பெண்களும், தொழிலாளர்களும் சென்று வருகின்றனர். அவர்களின் முக்கிய தேவையான செஞ்சி, திண்டிவனம் வழியாக சென்னைக்கு செல்லும் வகையில் திண்டிவனம் வரை ரயில் பாதை அமைக்கும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் நாங்கள் என்ன பாவம் செய்தோம் என புலம்பும் நிலைக்கு திருவண்ணாமலை மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
70 கிலோ மீட்டர் தூரம் ரயில் பாதை அமைக்க பள்ளங்கள் தோண்டப்பட்டு, 4 பெரிய பாலங்கள் கட்டப்பட்ட நிலையில் இத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை மத்திய அரசு திரும்ப பெற்றுள்ளது. அரசியல் கட்சிகள் இதைப்பற்றி கேள்வி ஏதும் கேட்கவில்லை. நிதியை பெற்றுத் தர முயற்சிக்கவில்லை. அரசு போக்குவரத்து கழகங்களுக்கு வருமானம் குறையும் என்பதாலேயே உள்ளுர் அரசியல்வாதிகள் இத்திட்டத்தை நிறைவேற்ற முனைப்பு காட்டவில்லை என்ற குற்றச்சாட்டும் பொதுமக்களால் வைக்கப்படுகிறது.
வந்தவாசி, செய்யாறு, ஆரணி பகுதி மக்கள் பயன்பெறக் கூடிய திண்டிவனம்-நகரி ரயில் பாதை அமைக்கும் திட்டத்திற்கு நிலம் ஆர்ஜிதம் செய்யும் பணியில் மெத்தனம் ஏற்பட்ட போது ஆரணி எம்.பியாக இருந்த விஷ்ணுபிரசாத் அப்போதைய கலெக்டர், அதிகாரிகளை எதிர்த்து குரல் கொடுத்தார். மக்களை திரட்டி போராட்டம் நடத்துவேன் என எச்சரித்தார். அதன் பிறகு இத்திட்டம் வேகமெடுத்தது. கடந்த ஜனவரி மாத நிலவரப்படி 594 ஹெக்டேர் நிலத்தில் 510 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய பட்ஜெட்டிலும் ரூ.347 கோடி நிதியும் ஒதுக்கி தரப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை-சென்னை ரயில் பாதை திட்டம் கிடப்பில் போடப்பட்டதற்கு 197 ஹெக்டேர் நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு ஒத்துழைப்பு தராததே காரணம் என சொல்லப்படுகிறது. இதை அமைச்சர் எ.வ.வேலு மறுத்துள்ளார்.
சமீபத்தில் திருவண்ணாமலையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதைப்பற்றி கேட்ட போது அவர் அளித்த பதில்,
இந்த திட்டத்திற்கு யாரும் குறுக்கே நிற்கவில்லை. இங்கு இருக்கிற சட்டமன்ற- நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறுக்கே நின்றார்களா? செஞ்சி மஸ்தான் குறுக்கே நின்றாரா? அல்லது நான் நின்றேனா? பிச்சாண்டி நின்றாரா?
நிலம் எடுப்பதற்கு முறை என்னவென்றால் நிலம் போய் அப்படியே எடுத்துக் கொள்ள முடியாது, மாநில அரசு சாலைகள் போட வேண்டும் என்று சொன்னால், சாலை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று சொன்னால் பணம் தர வேண்டும். முதலில் என்ன நிலம் எடுக்கப் போகிறோம்?, என்ன மார்க்கெட் ரேட்டில் எடுக்கப் போகிறோம்? அதற்கு எவ்வளவு பணம் தேவை என்பதை சொல்லுவது வருவாய்த்துறை.
அதன் பிறகு நாங்கள் பணத்தை ஒதுக்கினால் வருவாய் துறைக்கு பணம் சென்று டிஆர்ஓ நிலத்தை கையகப்படுத்தி துறையிடம் ஒப்படைப்பார். அதன்படி வருவாய் துறைக்கு பணம் ஏதாவது வந்துள்ளதா? விழுப்புரம் மாவட்டத்திற்கு பணம் வந்துள்ளதா? சொல்ல சொல்லுங்கள். மத்திய அரசாங்கம் பணம் ஒதுக்கி இருக்கிறோம், நீங்கள் நிலம் எடுக்க தவறி விட்டீர்கள் என்று சொல்ல சொல்லுங்கள்.
இவ்வாறு எ.வ.வேலு கூறினார்.
மத்திய அரசு நிதி ஒதுக்க கோரி திமுக ஏன் போராட்டங்களை நடத்தவில்லை என்ற கேள்வியையும் மக்கள் முன்வைக்கின்றனர்.
போளூர் ரயில்வே மேம்பால பணிகள் தாமதமான போது திமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினர், வியாபாரிகள், பொதுமக்கள் இணைந்து உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். ஆனால் திருவண்ணாமலை இதற்கு நேர்மாறாக உள்ளது என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

நரசாபூர் ரயில் குறித்து…
பிரதி வாரம் புதன்கிழமை பகல் 1 மணிக்கு நரசாபூரில் புறப்பட்டு பலகோலு,குடிவாடா,அகிவிடு,கைக்ளூர்,விஜயவாடா,தெனாலி,பாபட்லா,சிராலா,ஓங்கோல்,நெல்லூர்,ரேணிகுண்டா,திருப்பதி,சித்தூர்,காட்பாடி, வேலூர் வழியாக வியாழக்கிழமை அதிகாலை 4.55 மணிக்கு திருவண்ணாமலையை வந்தடையும்.
9.07.2025, 16.07.2025, 23.07.2025, 6.08.2025, 13.08.2025, 20.08.2025, 03.09.2025, 24.09.2025 ஆகிய தேதிகளில் நரசாபூரிலிருந்து புறப்படும்.
திருவண்ணாமலையில் பிரதிவாரம் வியாழக்கிழமை காலை 11 மணிக்கு புறப்பட்டு வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணிக்கு நரசாபூரை சென்றடையும்.
10.07.2025, 17.07.2025, 24.07.2025, 7.08.2025, 14.08.2025, 21.08.2025, 4.09.2025, 25.09.2025 ஆகிய தேதிகளில் திருவண்ணாமலையிலிருந்து புறப்படும்.
பயண நேரம்-15 மணி நேரம். பயண தூரம்-723 கிலோ மீட்டர். கட்டணம்- சாதாரண வகுப்பு-ரூ.240, படுக்கை வசதி(ஸ்லீப்பர்)ரூ.512
திருவண்ணாமலையிலிருந்து திருப்பதி செல்பவர்களுக்கு இந்த ரயில் பயனுள்ளதாக இருக்கும். அடுத்த மாதம் 25-ஆம் தேதி வரை மட்டும்தான் இந்த ரயில் இயக்கப்படும். வரவேற்பை பொறுத்து மீண்டும் இயக்க முடிவெடுக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இன்று பவுர்ணமி என்பதால் சுமார் 2 ஆயிரம் பேர் அந்த ரயிலில் பயணித்தனர்.
ஏபிஜிபி(அகில பாரத நுகர்வோர் விழிப்புணர்வு இயக்கம்) ஒருங்கிணைப்பாளர் வி.கே.சீனுவாசன், இணை ஒருங்கிணைப்பாளர் என்.சம்பத், ஆலோசகர் வேங்கடரமேஷ்பாபு உள்ளிட்டோர் இந்த சிறப்பு ரயிலுக்கு தீபாராதனை காண்பித்து பயணிகளுக்கு இனிப்பு வழங்கினர். ரயில் டிரைவருக்கு சால்வை அணிவித்து கவுரவித்தனர்.
வீடியோவை காண…
தெலுங்கானாவிற்கு ரயில் விட்டாச்சு…



