திருவண்ணாமலையில் திமுக பிரமுகரை வெட்டி கொலை செய்த கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
திருண்ணாமலை காந்திநகர் 3வது தெருவைச் சேர்ந்தவர் பங்க் பாபு வயது 47. இவருக்கு ஆனந்தி என்ற மனைவியும்,ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகன் இன்ஜினியரிங் படித்துள்ளார்.மகள் பிளஸ் டூ படித்து வருகிறார்.
 |
| பங்க் பாபு |
பங்கு பாபு மீது கடந்த 2017ஆம் ஆண்டு அதிமுக நகர செயலாளராக இருந்த கனகராஜை கொலை செய்த வழக்கு உள்ளது. வழக்கில் கைது செய்யப்பட்டவர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். கொலை வழக்கு காரணமாக அவரை கட்சியில் இருந்து நீக்கி விட்டதாக திமுக அறிவித்தது. ஆனாலும் பங்கு பாபு திமுக கொடியுடன் காரில் வலம் வந்து கொண்டிருந்தார்.
ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த பங்க் பாபு இன்று காலை பதினோரு மணி அளவில் திருவண்ணாமலை காந்திநகர் பைபாஸ் ரோட்டில் உள்ள கும்பகோணம் காபி பாரில் டீ குடிக்கச் சென்றபோது 4 பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொலை செய்தது. கழுத்து துண்டான நிலையில் அவர் அதே இடத்தில் ரத்தவெள்ளத்தில் பிணமானார்.
போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசாங்க மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தப்பியோடிய கொலையாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் தனிப்படைகளை அமைத்து உள்ளார். இப்படையினர் கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்நிலையில் பங்க் பாபுவால் கொலை செய்யப்பட்ட கனகராஜின் மனைவி ஞானசுந்தரி மற்றும் அவரது உறவினர்கள் 2 பேரை போலீசார் தங்கள் கஸ்டடியில் வைத்து விசாரித்து வருகின்றனர். பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.இதையடுத்து ஞான சுந்தரியின் தம்பியை போலீசார் தேடி வருகின்றனர்.
சம்பவ இடத்தில் கொலையாளிகள் காத்திருப்பதும் பங்கு பாபுவை நீண்டநேரம் நோட்டம் விடுவதும், அவர் கடையில் இருந்து சிறிது தள்ளி வரும் நேரம் வரை காத்திருந்து அவரை வெட்டிக் கொலை செய்வதும், பிறகு தப்பி ஓடுவதும் அருகிலிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது. இந்தப் பதிவுகளை போலீசார் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.